உத்தரபிரதேசத்தில் 255 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சி ..!!

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபையில் 255 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

Update: 2022-03-10 21:18 GMT
லக்னோ, 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள், ஒரு ‘மினி' பொதுத்தேர்தல் போல அமைந்ததால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவு அடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதில் இந்த தேர்தல்கள் முக்கிய பங்கு வகிப்பதால், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற வரிந்து கட்டின.

பா.ஜ.க. வென்று தன் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துமா அல்லது எதிர்க்கட்சிகள் வென்று தங்கள் பக்கம் அலையைத் திருப்புமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த 5 மாநில தேர்தலில் கொரோனா அலைகளுக்கு மத்தியிலும் மக்கள் அலை, அலையாக வந்து ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 7 கட்டங்களாக நடந்த உ.பி. தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 65 சதவீத வாக்குகளும், பஞ்சாப்பில் 72 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 76 சதவீத வாக்குகளும், கோவாவில் 79 சதவீத வாக்குகளும் பதிவாகின.

5 மாநில தேர்தலில், தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைக்கும், உத்தரகாண்டில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும், மணிப்பூரில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும், கோவாவில் தொங்கு சட்டசபை அமையும் என கருத்துக்கணிப்புகள் கூறின.

இந்த நிலையில் 5 மாநில தேர்தலில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை, பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெறத் தொடங்கினர்.

பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யத் தொடங்கினர். டெல்லிக்கு வெளியே பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது.

இறுதி நிலவரப்படி உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என 4 மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

இந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பா.ஜ.க.வுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டபோது, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி பெற்றால் நலத்திட்டங்கள் சிறப்பாக நிறைவேறும் என்பதால் இரட்டை என்ஜின் அரசு வேண்டும் என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தினார். அதுமக்கள் மத்தியில் பேசுபொருளானது. அது தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு வாக்குகளாகவும் மாறி இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.

* உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

* முன்னாள் முதல்-மந்திரியும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆட்சியைப் பறிக்கும் கனவுடன் களம் புகுந்த சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

* இந்த மாநிலத்தில் முதன்முதலாக தேர்தல் களத்தில் குதித்த ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தோல்வியை சந்தித்தது. அந்த கட்சி 1 சதவீத வாக்குகளைக்கூட பெற முடியவில்லை.

* பதவியை ராஜினாமா செய்து விட்டு கன்னாஜ் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் கண்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஆசிம் அருண் வெற்றி பெற்றிருக்கிறார். சமாஜ்வாடி வேட்பாளரை 6 ஆயிரம் வாக்குகளில் தோற்கடித்தார்.

* சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் சிவபால்சிங் யாதவ், ஜஸ்வந்த்நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளரை அவர் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

* துணை முதல்-மந்திரி கேசவ்பிரசாத் மவுரியா, சிராத்து தொகுதியில் தோல்வி அடைந்தார்.

யோகி ஆதித்யநாத் 5 ஆண்டுகாலம் உ.பி.யில் தொடர்ந்து ஆட்சி நடத்தி மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்கிறார். கடந்த முறை எம்.எல்.சி. ஆக இருந்து முதல்-மந்திரி பதவி ஏற்ற அவர் இந்த முறை எம்.எல்.ஏ.வாகி முதல்-மந்திரி பதவி ஏற்கிறார், அதுவும் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் உ.பி.யில் எம்.எல்.ஏ.வான ஒருவர் முதல்-மந்திரி பதவி ஏற்கிறார். அது மட்டுமல்ல, இந்த மாநிலத்தில் ஒரு முதல்-மந்திரி 5 ஆண்டுகள் முழுப்பதவிக்காலத்திலும் பதவி வகித்து, மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்பது 37 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார்.

உ.பி. தலைநகர் லக்னோவில் பா.ஜ.க. வெற்றியை அந்தக் கட்சியின் தொண்டர்கள் மேளதாளங்களுடன் ஆடிப்பாடி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

வெற்றி குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், " உ.பி. வளர்ச்சி அடைவதற்கு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலைப் பெற்று வருகிறோம். பா.ஜ.க. பெற்ற வெற்றியின் பின்னணியில் தேசியத்துவம் உள்ளது. பா.ஜ.க.வின் இரட்டை எந்திர அரசு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை வழங்கியது. உ.பி.யில் பா.ஜ.க. வெற்றியை உறுதிசெய்ததன் மூலமாக மாநிலத்தில் சாதி, மத அரசியலை மக்கள் குழி தோண்டிப் புதைத்து விட்டனர்’’ என குறிப்பிட்டார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், 255 இடங்களைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. இதனால உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 202 இடங்கள் பெற்றால் போதும் என்ற நிலையில் அந்தக்கட்சி கூட்டணி 255 இடங்களில் வென்றுள்ளது.



மேலும் செய்திகள்