பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடம்; சட்டசபையில் மந்திரி சர்ச்சை பேச்சு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முதலிடத்தில் ராஜஸ்தான் உள்ளது என சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மந்திரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-10 04:54 GMT


ஜெய்ப்பூர்,


ராஜஸ்தான் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மாநில நாடாளுமன்ற விவகார மந்திரி சாந்தி தாரிவால் பேசும்போது, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முதலிடத்தில் உள்ளோம்.  அதில், சந்தேகம் இல்லை.  ஏன் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முன்னிலையில் உள்ளோம்? என கேள்வி எழுப்பி நிறுத்திய அவர், ஏனெனில், ராஜஸ்தான் ஆண்கள் அதிகம் உள்ள மாநிலம் என கூறினார்.  இதனால், சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அவரது இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது.  இதுபற்றி ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா கூறும்போது, ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமையில் முதல் இடத்தில் உள்ளது என வெட்கமின்றி கூறியதுடன், பெண்களை புண்படுத்தியும் பேசியுள்ளார்.  ஆடவர்களின் கண்ணியமும் குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது.  பிரியங்கா காந்தி ஜி, நீங்கள் தற்போது இதற்கு என்ன சொல்கிறீர்கள், என்ன செய்ய போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பு அதிகாரி ஷெசாத், தனது பேச்சுகளால் மந்திரி, பாலியல் வன்கொடுமைகளை சட்டபூர்வம் ஆக்கும் வகையில் பேசியுள்ளார்.  இது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  அவரது பேச்சு வெறுப்பூட்டும் வகையில் உள்ளது.  ஆச்சரியமும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, தேசிய மகளிர் அணி தலைவி ரேகா சர்மாவும் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதுபோன்ற மந்திரிகளை ராஜஸ்தான் அரசு வைத்திருக்கிறது.  அதனாலேயே, மாநில பெண்கள் பாலின குற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.  போலீசார் எதுவும் செய்யாமல் உள்ளனர்.  இதுபோன்ற மந்திரிகளால், பெண்கள் எப்படி பாதுகாப்புடன் உணர்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  தாரிவாலுக்கு எதிராக மகளிர் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்