விமான விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக உயிர்தப்பியதாக மம்தா பானர்ஜி தகவல்
என் விமானத்தின் முன் மற்றொரு விமானம் திடீரென வந்த போது விமானியின் சாதுர்யத்தால் நான் தப்பித்தேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் கொல்கத்தா திரும்பிக் கொண்டு இருந்தார். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மற்றொரு விமானம் மோதுவது போல் வந்ததாகவும் விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்ட சபையில் இந்த தகவலை மம்தா பானர்ஜி தெரிவித்தார். மம்தா பானர்ஜி மேலும் கூறும் போது, 10 வினாடிகள் மேலும் சென்றிருந்தால் விமானம் நேருக்கு நேர் மோதியிருக்கும் எனவும் விமானியின் திறமையால் நான் உயிர்பிழைத்தேன். விமானம் 6 ஆயிரம் அடி கீழே இறங்கியது. நான் லேசான காயம் அடைந்தேன். எனக்கு இன்னும் வலி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏடிசி மற்றும் டிஜிசிஏவிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை” என்றார்.