உக்ரைன்: செல்லப்பிராணிகள் இன்றி இந்தியா வர மறுத்த இந்திய மருத்துவர்
இந்திய மருத்துவர், தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் உக்ரைனை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.
கீவ்,
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிரிகுமார் பாட்டீல். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு வந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல், அவர் எலும்பியல் மருத்துவராக அங்கு பணிபுரிந்து வருகிறார். போரினால் உக்ரைன் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிரிகுமார் தனது இரண்டு செல்லப்பிராணிகளான சிறுத்தைகளை விட்டு இந்தியா வர மறுத்துள்ளார்.
போர் தொடங்கிய பிறகு, தனிமையில் இருக்கும் திரு கிரி, தனது சிறுத்தைகளுக்கு இறைச்சியும், தனக்கு உணவும் வாங்குவதற்காக மட்டுமே தனது வீட்டை விட்டு வெளியே வருகிறார். இப்பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. ஆனால் டாக்டர் பாட்டீல், தனது செல்லப்பிராணிகளை விட்டு வர தயாராக இல்லை.
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் என் உயிரைக் காப்பாற்றுவதற்காக என் செல்லப்பிராணிகளை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். என் குடும்பத்தினர் என்னை திரும்பி வருமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் இவர்களை விட்டு என்னால் வர முடியாது. தனது செல்லப்பிராணிகள் அனைத்தையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல இந்திய அரசாங்கம் அனுமதிக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த வாரம் இந்திய மாணவர் ஒருவர், ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் தனது செல்லப்பிராணி ஒன்றுடன் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.