ஆபரேஷன் கங்கா: ருமேனியாவில் இருந்து 182 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் மும்பை வந்தது
உக்ரைனில் சிக்கித் தவித்த 182 இந்தியர்களுடன் ருமேனியாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் மும்பை வந்தடைந்தது.
மும்பை,
ரஷிய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பாக அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.
மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இதில் நேற்று இரவு 182 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தது. இதில் பெரும்பாலும் மாணவர்களே அடங்கியிருந்தனர். இவர்களை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் கபில் பாட்டீல் வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடினார்.