ரஷிய படையினரால் கொல்லப்பட்ட நவீனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

உக்ரைனில் போரில் சிக்கி உயிரிழந்த ஹாவேரி மாணவர் நவீன் குடும்பத்துக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தையும் பசவராஜ் பொம்மை வழங்கினார்.

Update: 2022-03-05 20:07 GMT
பெங்களூரு, 

உக்ரைனில் ரஷியா போர் தொடுத்துள்ளது. அங்குள்ள கார்கிவ் நகரில் உணவு வாங்க சென்றபோது, ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மாணவர் நவீன் உயிரிழந்தார். அவர் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்தை சேர்ந்தவர். அவரது உடலை கர்நாடகம் கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

இதற்கிடையே மாணவர் நவீனின் பெற்றோருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்கள். ஏற்கனவே மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் சபாநாயகர் கோலிவாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஹாவேரி மாவட்டத்திற்கு வந்தார்.

அப்போது சலகேரி கிராமத்திற்கு வந்த அவர், நவீனின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணத்தொகையை அவர் வழங்கினார். அதற்கான காசோலையை நவீனின் தந்தை சேகர கவுடாவிடம் வழங்கினார். அப்போது பசவராஜ் பொம்மை, நவீனின் உடலை கர்நாடகம் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நவீனுடன் இருந்த பெரும்பாலானவர்கள் கர்நாடகம் வந்துவிட்டனர். ஆனால் அவர் இந்த சம்பவத்தில் இறந்துள்ளார். இது எனக்கு துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை தாய்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவத்துறை மந்திரியுடன் தினமும் பேசுகிறேன். உக்ரைனில் உள்ள இந்திய தூதர்களிடமும் பேசினேன். அவரது உடல் அழுகாத வகையில் "எம்பார்மிங்" செய்து சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அங்கு குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இந்த தாக்குதல் குறைந்ததும் நவீனின் உடல் கொண்டுவரப்படும். நமது மாணவர்கள் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கவும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் நவீனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளோம். அவரது இன்னொரு மகனுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நவீனுக்கு இங்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. மத்திய அரசும் ஆலோசிக்கும். மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு என்பது மத்திய அரசு அளவில் நடக்கிறது. நீட் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்