தமிழகத்துக்கு மழை வெள்ள பாதிப்பு நிவாரணம் - மத்திய அரசு ரூ.353 கோடி ஒதுக்கீடு

தமிழகத்துக்கு மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ரூ.352.85 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Update: 2022-03-03 23:38 GMT
புதுடெல்லி,

கடந்த 2021-ம் ஆண்டு பெருவெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து கூடுதல் நிதிஉதவி அளிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி அதிகபட்சமாக கர்நாடகத்துக்கு ரூ.492.39 கோடி வழங்கப்படுகிறது. மராட்டியத்துக்கு ரூ.355.39 கோடியும், தமிழகத்துக்கு ரூ.352.85 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆந்திராவுக்கு ரூ.351.43 கோடியும், இமாசல பிரதேசத்துக்கு 112.19 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.17.86 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கூடுதல் நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மத்திய அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு அப்பாற்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-2022-ம் ஆண்டில் 28 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிதியத்தில் இருந்து ரூ.17,747.20 கோடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியத்தில் இருந்து ரூ.4,645.92 கோடியும் வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் செய்திகள்