25 ஆண்டுகளாக பாம்புக்கு நாங்கள் பால் வார்த்தோம்; உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, நாங்கள் 25 ஆண்டுகளாக ஒரு பாம்புக்கு பால் வார்த்தோம் என பா.ஜ.க.வை இலக்காக கொண்டு பேசியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நடந்த மகா விகாஸ் அகாடி கூட்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதன் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவசேனா சார்பில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், சிவசேனாவின் முன்னாள் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வை விமர்சிக்கும் வகையில் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். அவர் பேசும்போது, நாங்கள் 25 ஆண்டுகளாக ஒரு பாம்புக்கு பால் வார்த்தோம். அந்த பாம்பு தற்போது எங்களை நோக்கி சீறுகிறது என்று பேசியுள்ளார்.
எங்களை நோக்கி குறை சொல்பவர்கள் யாரையும் எதிர்கொண்டு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய பவார், என்னுடைய அரசியல் வாழ்வில் ஒருபோதும், எப்போதும் இதுபோன்ற ஒரு பழிவாங்கும் மத்திய அரசை கண்டது இல்லை என்று பேசியுள்ளார். அவர், பண மோசடி வழக்கு ஒன்றில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கைது நடவடிக்கையை குறிப்பிட்டு பேசியுள்ளார்.