தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கட்டணம் - அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து ஆராய தேசிய மருத்துவ ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்த குழு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது.
அந்த நெறிமுறைகள், கடந்த ஆண்டு மே மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த 1,800 கருத்துகளை ஆராய மற்றொரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு சமர்ப்பித்த இறுதி வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடந்த டிசம்பர் 29-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
அதன்படி, தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் 50 சதவீத மருத்துவ இடங்களில், அரசு மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி அறிவித்தது.
இந்த நிலையில், இதை அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 50 சதவீத மருத்துவ இடங்களுக்கு அந்த மாநிலத்தின் அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கப்படும் மருத்துவ கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இந்த நடைமுறை, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
இந்த சலுகையை அரசு ஒதுக்கீட்டில் இடம் வாங்கிய மாணவர்களுக்குத்தான் முதலில் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களுக்கு மட்டும் இந்த கட்டண சலுகையை வழங்க வேண்டும்.
ஒருவேளை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50 சதவீதத்தை விட குறைவாக இருந்தால், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் வாங்கியவர்களில், யார் அதிக தகுதி பெற்றவர்களோ அவர்களுக்கு கட்டண சலுகையை அளிக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு மாநிலத்தின் கட்டண நிர்ணய குழுவும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் நன்கொடை வசூலிக்கக்கூடாது. லாப நோக்கத்தில் கல்வியை அளிக்கக்கூடாது. கல்வி நிறுவனத்தை நடத்தும் செலவுகள், பராமரிப்பு செலவுகள் அனைத்தும் கல்வி கட்டணத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆடம்பர செலவுகளை கல்வி கட்டணத்தில் சேர்க்கக்கூடாது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.