புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

7 துணை திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை 2025-26-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Update: 2022-03-02 22:26 GMT
புதுடெல்லி,

புலம்பெயர்ந்த, நாடு திரும்பிய இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீரிகள், 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகள் ஒரு பொதுவான திட்டத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதற்காக ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 துணை திட்டங்கள் உள்ளடங்கிய இந்த திட்டத்தை நடப்பு 2021-22-ம் ஆண்டில் இருந்து வருகிற 2025-26-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதன்படி, புலம்பெயர்ந்தோர் ஒரு நியாயமான வருமானம் ஈட்டவும், பொது பொருளாதார நடவடிக்கைகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உதவி வழங்கப்படும்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் புரு அகதிகளுக்கும், பயங்கரவாத வன்முறைச் செயல்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதி மற்றும் பிற உதவிகள் வழங்கப்படும்.

மேற்கு வங்காளத்தில் முன்பு வங்காளதேச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் மேம்பாட்டுக்கும், அந்நாட்டில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து திரும்பியவர்களின் மறுகுடியமர்வு பணிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்