தீபாவளி, ஹோலி அன்று ஒரு கேஸ் சிலிண்டர் இலவசம் - மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் வாக்குறுதி!!
உத்தரபிரதேச சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், நாளை 6-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் 6-வது கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தோலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உத்தரபிரதேசத்தில் மூன்று என்ஜின் கொண்ட அரசை உருவாக்குவோம். அதில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் நோக்கம் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகிய மூன்றையும் சேர்த்து அரசு உருவாகும்.
பாஜக அரசுக்கு நீங்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகை தினத்தன்று பொதுமக்களுக்கு ஒரு கேஸ் சிலிண்டரை இலவசமாக வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.