மும்பையில் திடீர் மின்தடையால் பரபரப்பு - மின்சார ரெயில் சேவை பாதிப்பு
மும்பையில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட மின்தடையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மும்பை,
மும்பையில் நேற்று காலை 9.45 மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. முதலில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின் தடை ஏற்பட்டதாக கருதப்பட்டது. அதன்பிறகு தான் மும்பை முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
குறிப்பாக தாராவி, சயான், மாட்டுங்கா, பரேல், தாதர், பைகுல்லா, செம்பூர் உள்ளிட்ட மத்திய, தென்மும்பையில் உள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு இருந்தது. மும்பையில் அரிதிலும் அரிதாக தான் மின் தடை ஏற்படும். எனவே திடீரென நகரில் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் மின்தடை தொடர்பாக பெஸ்ட் நிறுவனம் வெளியிட்ட தகவலில், ‘‘டாடா நிறுவன மின் தொகுப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சயான், மாட்டுங்கா, பரேல், தாதர், சி.எஸ்.எம்.டி., பைகுல்லா உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது’’ என கூறப்பட்டு இருந்தது. மும்பையில் பெஸ்ட் தவிர டாடா பவர், அதானி நிறுவன மின் வினியோகமும் ஒரு சில பகுதிகளில் பாதிக்கப்பட்டது.
மின் தடை குறித்து டாடா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநில மின் வினியோக நிறுவனத்தில் இருந்து கல்வாவில் இருந்து டிராம்பே வரும் மின்பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தென்மும்பை பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது” என்றார்.
இதற்கிடையே சுமார் ஒரு மணி நேரத்தில் மின் தடை பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். திடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், "மெயின் மற்றும் துறைமுக வழித்தடத்தில் காலை 9.49 மணி முதல் 9.52 மணி வரை மின் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு எல்லா வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன" என்றார்.
எனினும் நேற்று விடுமுறை நாள் என்பதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.