மைனஸ் 40 டிகிரி குளிர்.. 20 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறி இந்திய ராணுவ வீரர்கள் சாதனை!!

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர் லடாக்கில் உள்ள 20 ஆயிரம் அடி உயர கர்சோக் காங்ரி மலை சிகரத்தில் முதன்முறையாக ஏறி சாதனை படைத்தனர்.

Update: 2022-02-23 06:50 GMT
புதுடெல்லி,

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) மத்திய மலையேறும் குழுவினர், லடாக்கில் உள்ள கர்சோக் காங்ரி மலை சிகரத்தில் முதன்முறையாக ஏறி சாதனை படைத்தனர். மலையேறும் குழுவினர் கர்சோக் காங்ரி மலை சிகரத்தை அடைவது இதுவே முதல்முறை ஆகும். 

மலையேறும் குழுவினர், பிப்ரவரி 20ஆம் தேதி அன்று சிகரத்தை அடைந்தனர். அவர்கள் கமாண்டன்ட் ரத்தன் சிங் சோனல் தலைமையில்  6 மலையேறும் குழுவினர் லடாக்கில் அமைந்துள்ள 20,177 அடி உயர மலை சிகரத்தில் ஏறினர். அவர்களுடன் துணைத் தலைவராக துணை கமாண்டன்ட் அனூப் நேகி இருந்தார். அவர்கள் அனைவரும் சிறப்பு மலையேறும் உபகரணங்கள் மற்றும் ஆதரவு அமைப்பு எதையும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மலை பகுதியில் இப்போது கடும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதற்கிடையே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அவர்கள் சிகரத்தை நோக்கி செல்லும் வழியில், லடாக் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 17,500 அடி உயரத்தில் இருக்கும் இடத்தில், அனைவரையும் அசரவைக்கும் விதமாக 55 வயதான இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை கமாண்டன்ட் ரத்தன் சிங் சோனால், ஒரே நேரத்தில் 65 புஷ்-அப்களை எடுத்து அசத்தினார். அங்கு மைனஸ் 30 டிகிரி குளிர் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்