உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று 4-ம் கட்ட தேர்தல்!
விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. 3 கட்ட தேர்தல்கள் முடிந்தநிலையில், இன்று 4-வது கட்ட தேர்தல் நடக்கிறது. 9 மாவட்டங்களில் அடங்கிய 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
இவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டமும் அடங்கும்.
காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. 2 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
24 ஆயிரத்து 643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உசைன்கஞ்ச், பிந்த்கி, பதேபூர் ஆகிய தொகுதிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 800 கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் எல்லைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இன்று தேர்தல் நடக்கும் 59 தொகுதிகளில், 50 தொகுதிகள் கடந்த தேர்தலில் பா.ஜனதா வென்ற தொகுதிகள் ஆகும்.