கால்நடை தீவன வழக்கு; லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

கால்நடை தீவன 5வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-02-21 09:01 GMT


ராஞ்சி,


பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்,  கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது.  தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது.

தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.139 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து கடந்த 15ந்தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.  இதிலும், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.  இந்த வழக்கில் மொத்தம் 75 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  லாலு பிரசாத் யாதவ் உள்பட 39 பேருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது என தகவல் வெளியானது.

மேலும் 35 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் முன்னாள் எம்.பி. ஜெகதீஷ் ஷர்மா மற்றும் அப்போதைய பொது கணக்கு குழு தலைவர் துருவ் பகவத் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

இந்த நிலையில், கால்நடை தீவன 5வது வழக்கில், சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதில், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இதுதவிர, ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்