ஏர் இந்தியா புதிய தலைமை அதிகாரி; பின்னணி குறித்து ஆராய ‘ரா’ உதவி பெறப்படும் - மத்திய அரசு தகவல்
துருக்கி நாட்டை சேர்ந்தவரான ஏர் இந்தியா புதிய தலைமை அதிகாரியின் பின்னணி பற்றி ஆராய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, சமீபத்தில் டாடா குழுமத்துக்கு விற்கப்பட்டது. இதையடுத்து, இல்கர் அய்சி என்பவரை ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக டாடா குழுமம் நியமித்துள்ளது.
இவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர். துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்தான்புல் மேயராக முன்பு பணியாற்றியபோது அவருடைய ஆலோசகராக இல்கர் அய்சி இருந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் துருக்கி ஏர்லைன்ஸ் தலைவராக பணியாற்றி, அதன் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார்.
இந்த நிலையில், இல்கர் அய்சியின் பின்னணியை ஆராய உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்திய நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டினர் நியமிக்கப்பட்டால், அவர்களது பின்னணியை நுணுக்கமாக ஆய்வு செய்வது வழக்கம். ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி விஷயத்திலும் அதே ஆய்வை மேற்கொள்வோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இல்கர் அய்சியின் பின்னணியை ஆராய வெளிநாடுகளில் உளவுப்பணி மேற்கொள்ளும் இந்திய அமைப்பான ‘ரா’ உதவி பெறப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.