ஒடிசாவில் 3-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பயங்கர வன்முறை
ஒடிசாவில் 3-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் பயங்கர வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பச்சோல் பஞ்சாயத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற ஒரு கும்பலை படம் பிடித்த ஊடகத்தினர் மீது தாக்குதல் நடந்தது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் 3-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பயங்கர வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அத்துடன் வாக்குச்சாவடி கைப்பற்றுதல், வாக்குப்பெட்டிகள் கொள்ளையடித்தல் என பல்வேறு சமூக விேராத செயல்களும் அரங்கேறின.
அந்தவகையில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பச்சோல் பஞ்சாயத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற ஒரு கும்பலை படம் பிடித்த ஊடகத்தினர் மீது தாக்குதல் நடந்தது.
அதே பஞ்சாயத்தில் 2 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் கடத்தி செல்லப்பட்டன. இதில் ஒரு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் அங்குள்ள குளத்தில் வீசிச்சென்றனர்.
இதைப்போல போலீசார் மீது கல்வீச்சு, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வாக்காளர்கள் மீது தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்ததால் 3-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பெரும் சர்ச்சையை சந்தித்து இருக்கிறது.
இந்த தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் அதையும் மீறி இந்த சம்பவங்கள் அரங்கேறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.