ஒசாமா போன்ற பயங்கரவாதியை 'ஜி' என்று அழைக்கின்றனர்- அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்
ஒசாமா போன்ற பயங்கரவாதியை இவர்கள் 'ஜி' என்று அழைக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில், உத்திரபிரதேசத்தின் ஹர்தோயில் நடைபெற்ற பேரணியில் சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார், பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு முந்தைய உத்தரபிரதேச அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை கவலையளிக்கிறது. ஒசாமா போன்ற பயங்கரவாதியை இவர்கள் 'ஜி' என்று அழைக்கின்றனர். 2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயம் அடைந்தனர், சில கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுகின்றன. மேலும் உத்தரபிரதேசத்தில் நடந்த 14 பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில், பல பயங்கரவாதிகளின் மீதான வழக்குகளை திரும்ப பெற சமாஜ்வாதி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது”என்று கூறினார்.
மேலும் அவர், மூத்த மாநில தலைவர்கள் மற்றும் முதல்வர் அகிலேஷ் யாதவின் கட்சி பாகிஸ்தான் மற்றும் அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் ஆதரவாளர்கள் என்றும் சட்டம் மற்றும் ஒழுங்கில் அரசு மெத்தனம் காட்டுவதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு எங்கள் பண்டிகைகளை நிறுத்தியவர்களுக்கு மார்ச் 10-ம் தேதி உத்தரபிரதேச மக்களிடம் இருந்து பதில் கிடைக்கும்” என்றார்.