தேர்தல் விதிமீறல் - பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மீது வழக்குப்பதிவு!

பிரசார நேரம் முடிவடைந்த பின்னரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக முதல் மந்திரி சன்னி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-19 06:58 GMT
அமிர்தசரஸ்,

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை(20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாஜக, சிரோமணி அகாலி தளம் என பலமுனை போட்டி உள்ளது.  இதனால்,தேர்தல் களம் அனல் பறந்தது. 

தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 

இந்நிலையில், பிரசார நேரம் முடிவடைந்த பின்னரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்து மூஸ் வாலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மான்சா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  சித்து மூஸ் வாலா மற்றும் சன்னி இருவரும் தங்கள் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில்  தேர்தல் விதிகளை மீறியதாக கருதி  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

முன்னதாக, உத்தரபிரதேசம், பீகார், டெல்லி மாநிலங்களிலிருந்து வருபவர்களை பஞ்சாப் உள்ளே நுழைய விடக்கூடாது என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய சன்னியின் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இந்நிலையில், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பேசியதாக  அவருக்கு  எதிராக லூதியானாவில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் லூதியானா கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்