டெல்லி: வீட்டில் பதுக்கிய 3 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்
டெல்லியில் வீடு ஒன்றில் இருந்து 3 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் வடகிழக்கே பழைய சீமாபுரி பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்குரிய வகையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதுபற்றி தேசிய பாதுகாப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையிட்டனர்.
அதில், 3 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று இருந்துள்ளது. இந்த வெடிகுண்டில் அம்மோனியம் நைட்ரேட், ஆர்.டி.எக்ஸ் மற்றும் டைமர் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரியில் காஜிப்பூரில் உள்ள மலர் சந்தையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை அது ஒத்திருந்தது.
இதன்பின்பு தேசிய பாதுகாப்பு படையினர் அந்த வெடிகுண்டை வேறு இடத்திற்கு கொண்டு சென்று செயலிழக்க செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்கள் டெல்லி-உத்தர பிரதேச எல்லையருகே பதுங்கியுள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.