போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள்
போர் பதற்றம் நீடித்து வரும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிட்டு படைகளை குவித்து வரும் ரஷியாவால் உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் களமிறங்க திட்டமிட்டு உள்ளதால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.
இந்த பதற்றமான சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியேறுமாறும், மற்றவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, கல்வி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக விமான போக்குவரத்தை அதிகரிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்தவகையில் இந்தியா-உக்ரைன் இடையே அதிக விமானங்களை இயக்குவது தொடர்பாக பல்வேறு விமான நிறுவனங்களுடன், மத்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல இந்திய மாணவர்கள் தற்போது உக்ரைனில் இருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் நாடு திரும்புவதை குறித்தும், இதற்காக விமானங்களைப் பெறுவது பற்றியும் மாணவர்களின் குடும்பங்கள் கவலையாக உள்ளன. எனவே இதற்காக விமான போக்குவரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது’ என தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள தலைநகர் கீவில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதைப்போல அவர்களது குடும்பத்தினர், தங்கள் உறவினர்களின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.