லாலு பிரசாத் யாதவ் மீதான ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - தேஜஸ்வி யாதவ்
கால்நடை தீவன ஊழல் தொடர்புடைய மேலும் ஒரு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாட்னா,
பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத், கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது.
தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதிலும், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 75 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
“எல்லோரும் கோர்ட்டு உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இதுவே கடைசி தீர்ப்பாகாது.
இதற்கு முன் 6 முறை தண்டனை அறிவிக்கப்பட்டதால், அனைத்து வழக்குகளுக்கும் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.
லாலு ஜி நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார். ஐகோர்ட்டுக்கு மேலே சுப்ரீம் கோர்ட்டு உள்ளது” என்று கூறினார்.
இதற்கிடையே, தீவன ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் உள்பட 39 பேருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.