சில்லரை விலைவாசி உயர்வு 6.01% அதிகரிப்பு - தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்
உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் 2022 ஜனவரியில் 5.43% ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் 5.36% ஆக இருந்த சில்லைரை விலைவாசி உயர்வு விகிதம், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஜனவரி மாதம் கிராமப்புறங்களில் சில்லரை விலைவாசி உயர்வு விகிதம் 6.12% ஆகவும், நகர்புறங்களில் 5.91% ஆகவும் அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 டிசம்பரில் 4.05% ஆக இருந்த நிலையில், 2022 ஜனவரியில் 5.43% ஆக உயர்ந்துள்ளது.
சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு ரக உணவுகளின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2022 ஜனவரில் 18.70% அதிகரித்துள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள் விலைவாசி உயர்வு விகிதம் 8.84% ஆகவும், எரிபொருட்கள் விலைவாசி உயர்வு விகிதம் 9.32% ஆகவும் அதிகரித்துள்ளது.
சர்வெதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 15 டாலர் அதிகரித்து தற்போது 95 டாலரை எட்டியுள்ளது. இதன் காரணமாக சில்லரை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்ககூடும் என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.