ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இல்கர் அய்சி நியமனம்!
ஒரு புகழ்பெற்ற விமான நிறுவனத்தை வழிநடத்தி, டாடா குழுமத்தில் சேரும் பாக்கியத்தை ஏற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்று இல்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டாடா சன்ஸ் துருக்கிய ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சியை ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
இதுகுறித்து டாடா சன்ஸ் வெளியீட்டுள்ள செய்திகுறிப்பில், "ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஆக இல்கர் அய்சியை நியமிப்பதற்கு உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த நியமனம் ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 2022 அல்லது அதற்கு முன் அவர் தனது பொறுப்புகளை இல்கர் அய்சி ஏற்றுக்கொள்வார் என்று டாடா சன்ஸ் கூறியுள்ளது.
இல்கர் நியமனம் குறித்து, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில், "இல்கர் ஒரு விமானப் போக்குவரத்துத் துறையின் தலைவர், அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் துருக்கிய ஏர்லைன்ஸை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஏர் இந்தியாவை வழிநடத்தும் டாடா குழுமத்திற்கு அவரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கபட்ட இல்கர் அய்சி கூறுகையில், “ஒரு புகழ்பெற்ற விமான நிறுவனத்தை வழிநடத்தி, டாடா குழுமத்தில் சேரும் பாக்கியத்தை ஏற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ஏர் இந்தியா மற்றும் டாடா குழுமத்தின் தலைமைத்துவத்தில் உள்ள சக ஊழியர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம், இந்தியாவின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் சிறந்த விமான அனுபவத்துடன் உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவின் வலுவான பாரம்பரியத்தைப் பயன்படுத்துவோம்”. என கூறினார்.
கடந்த மாதம் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.