மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்...!

ஜிம்பாப்வே நாட்டிலிருந்து மும்பை வந்த பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-13 07:53 GMT
மும்பை,

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களைக் கடத்தியதாக ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை சுங்கத் துறையின்  நுண்ணறிவுப் பிரிவு நேற்று கைது செய்துள்ளது. 

ஹராரேயில் இருந்து இந்தியா வந்த ஜிம்பாப்வேயை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்ட போது, தனது டிராலி பேக், எக்ஸிகியூட்டிவ் பை மற்றும் இரண்டு பைல்களில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன் பின் அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரி கூறுகையில், “ஜிம்பாப்வே பெண்ணிடம் இருந்து 7,006 கிராம் மஞ்சள் தூள் ஹெராயின் மற்றும் 1,480 கிராம் வெள்ளை கிரிஸ்டல் துகள்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.60 கோடி” என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்