வெறும் அரசியலுக்காக கொரோனா தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் கட்சி வதந்திகளை பரப்பியது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அரசியலுக்காக கொரோனா தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் கட்சி வதந்திகளை பரப்பியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
டேராடூன்,
70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில வாரங்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று பிரதமர் மோடி உத்தரகாண்டில் வாக்கு சேகரித்தார். ருத்ராபூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான சுகாதார பேரிடர் இருந்தபோதும், உத்தரகாண்டில் பா.ஜனதா அரசு வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்ததுடன், தேவையில் இருந்த மக்களுக்கு விரைவான சேவைகளையும் வழங்கியது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான எந்த திட்டத்தையும் பா.ஜனதா விட்டு வைக்கவில்லை. மாநிலத்தில் நடைபெற்று வரும் பெரிய சாலை, ெரயில், விமானம் மற்றும் ரோப்வே இணைப்புகள் உள்ளிட்ட திட்டங்களே அதற்கு ஆதாரமாக உள்ளன.
இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவர் கூட காலி வயிற்றுடன் தூங்க செல்லக்கூடாது என்ற முடிவுடன் செயல்பட்டு அதை நிறைவேற்றியும் வைத்தோம். பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் அதை செயல்படுத்தினோம்.
இந்த பேரிடரின்போது வேறு எந்த அரசுகளும் மாநிலத்தில் இருந்திருந்தால் இலவச ரேஷன் வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட ஏழைகளுக்கு உதவும் திட்டங்கள் எதுவும் மக்களை போய் சேர்ந்திருக்காது என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.
அரசியலுக்காக கொரோனா தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் கட்சி வதந்திகளை பரப்பியது. ஏனென்றால், தடுப்பூசிகளால் நிலைமை மீண்டும் சீரானால், அரசுக்கு எதிராக எதுவும் பேச முடியாது என்று அவர்கள் நினைத்தது.
இதைப்போல நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியான மறைந்த பிபின் ராவத்தையும் காங்கிரஸ் துஷ்பிரயோகம் செய்தது. இந்த அவமதிப்புக்கு சரியான பதிலடியை வருகிற தேர்தலில் நீங்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.