சேலையை எடுக்க மகனை 10வது மாடியில் இருந்து கீழே இறக்கிய பெண்; வைரலான வீடியோ
அரியானாவில் சேலையை எடுக்க பெண் ஒருவர் தனது மகனை போர்வையில் கட்டி 10வது மாடியில் இருந்து கீழே இறக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
பரீதாபாத்,
அரியானாவின் பரீதாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் பல உள்ளன. இதில், 10வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவரின் சேலை 9வது மாடியின் பால்கனியில் விழுந்துள்ளது. 9வது மாடியின் வீடு பூட்டியிருந்தது.
இதனால், சேலையை எடுக்க விபரீத முடிவை அந்த பெண் எடுத்துள்ளார். அவர் தனது மகனை போர்வை ஒன்றால் கட்டி கீழே இறக்கி உள்ளார். அந்த பையனும் அதன் வழியே 9வது மாடிக்கு சென்று சேலையை எடுத்துள்ளான்.
இதன்பின்பு சிறுவனை, அந்த பெண் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் மேலே தூக்கியுள்ளார். இந்த வீடியோவை எதிர்ப்புறத்தில் இருந்த குடியிருப்பில் வசித்து வரும் நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை ஐ.பி.எஸ். அதிகாரி திபன்ஷு கப்ரா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் பல்வேறு வகையில் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.
அந்த பெண்ணின் அண்டை வீட்டில் வசிக்கும் பெண் கூறும்போது, தனது மகனின் வாழ்வை பணயம் வைக்க எடுத்த முடிவு கண்டனத்திற்கு உரியது என்று கூறியுள்ளார். வேறு ஒருவரின் உதவியை அல்லது சேலையை எப்படி எடுப்பது என ஆலோசனை கேட்டு இருக்கலாம் என கூறியுள்ளார்.