வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 15, 16-ந் தேதிகளில் விசாரணை
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வருகிற 15, 16-ந்தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வருண் கே.சோப்ரா, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி, இருதரப்பு சார்பிலும் முன்வைக்கப்படவுள்ள வாதங்களை எழுத்துப்பூர்வமாக தொகுத்து ஆவணங்களாக தாக்கல் செய்துள்ளோம். இரு தரப்புக்கும் இந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சில எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை காலஅவகாசம் வேண்டும். இந்த விவகாரத்தில் 31 மனுதாரர்களுக்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும். வக்கீல்களை தயாராக இருக்கச் சொல்லுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரும் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.