பர்தா விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல - கர்நாடக உள்துறை மந்திரி!
கோர்ட் சொல்வதை நாங்கள் கேட்டு அதன்படி நடப்போம் என்று கர்நாடக மாநில உள்துறை மந்திரி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் பர்தா விவகாரம் குறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா இன்று பேசுகையில்:-
“பர்தா விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல. கர்நாடகாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹிஜாப் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டோர் வெளியாட்களே தவிர மாணவர்கள் அல்ல.
கோர்ட் உத்தரவு இன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாங்கள் கோர்ட்டுக்கு அறிவுரை வழங்க இயலாது. கோர்ட் சொல்வதை நாங்கள் கேட்டு அதன்படி நடப்போம்” என்று கூறினார்.
முன்னதாக, பர்தா விவகாரத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளன என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று கேபினட் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வருவாய்துறை மந்திரி அசோக் கூறுகையில், “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குள் பர்தா அல்லது காவி சால்வை என இரண்டுமே அனுமதிக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.