பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மாநிலங்களவையில் மவுன அஞ்சலி
புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கரின் உடல் நேற்று மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று கூடிய மாநிலங்களவையில் அவை தலைவர் வெங்கையா நாயுடு பழம்பெரும் பாடகியும் முன்னாள் சபை உறுப்பினருமான லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் குறிப்பை வெளியிட்டார்.
அதில் அவர், லதாமங்கேஷ்கரின் மறைவு “ஒரு பழம்பெரும் பின்னணிப் பாடகரை, இரக்கமுள்ள மனிதரையும், இந்திய இசை மற்றும் திரைப்பட உலகில் உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது மற்றும் இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது”. என்று தெரிவித்தார்.
புகழ்பெற்ற பாடகிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.