இந்தியாவை பிரதமர் ஆளவில்லை, மன்னர்தான் ஆள்கிறார்: ராகுல் காந்தி தாக்கு
முந்தைய ஆட்சி காலத்தில் இந்தியாவை பிரதமர் ஆட்சி செய்தார். ஆனால், இன்றைய இந்தியாவை தன்னிச்சையாக முடிவு எடுக்கும் மன்னர் ஆட்சி செய்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்தார்.
உதம் சிங் நகர்,
இந்தியாவுக்கு தற்போது பிரதமர் இல்லை, ஆனால், தான் ஒரு முடிவு எடுக்கும் போது அனைவரும் அப்படியே ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் மன்னர் இருக்கிறார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். உத்தரகாண்டில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது; -
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடி விவசாயிகளை மாதக்கணக்கில் சாலைகளில் நிற்க வைத்தார். காங்கிரஸ் ஒருபோதும் இதுபோன்று செய்யாது. விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கதவுகளை மூடியது கிடையாது. அதேவேளையில் அவர்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட காங்கிரஸ் விரும்புகிறது.
அனைவருக்கும் பணியாற்றவில்லை என்றால் அவர் பிரதமராக இருக்க முடியாது. அந்த வகையில், நரேந்திர மோடி பிரதமர் இல்லை. இந்தியாவுக்கு தற்போது பிரதமர் இல்லை. மன்னர் முடிவு எடுக்கும் போது அனைவரும் ஆமோதிக்க வேண்டும் என நம்பும் மன்னர் தான் தற்போது உள்ளார்” என்றார்.