எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 5 ஆயிரம் வழக்குகள் நிலுவை - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்கள் மீது சுமார் 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க உத்தரவிடக்கோரி, வக்கீல் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை அளிக்க மூத்த வக்கீல் விஜய் ஹன்சாரியாவை கோர்ட்டு ஆலோசகராக சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அதையடுத்து, விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்கள் மீது சுமார் 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 1,899 வழக்குகள் 5 ஆண்டுகள் பழமையானவை. நிறைய வழக்குகள் தீர்வு காணப்பட்டாலும், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தொடர்ந்து பதவிக்கு வருவதால், வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இவற்றை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.