கூடுதல் வரி விதிக்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தினார் - நிர்மலா சீதாராமன்
கூடுதல் வரி எதுவும் விதிக்கக்கூடாது என பிரதமர் மோடி தெளிவாக அறிவுறுத்தினார் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பிலோ, வருமான வரி விதிப்பு அடுக்குகளிலோ எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தன் பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் கூடுதல் வரி விதிக்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பெருந்தொற்று காலத்தில் வரியை அதிகரிக்க அவர் விரும்பவில்லை’ என்றார்.