டெல்லியில் நடந்த போராட்டத்தில் போலீசாருடன் ‘திடீர்’ மோதல்: 50 மாணவர்கள் கைது
தஞ்சை திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டியில் படித்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கு மதமாற்ற முயற்சிகளே காரணம் என கூறி பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
புதுடெல்லி,
தஞ்சை திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டியில் படித்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கு மதமாற்ற முயற்சிகளே காரணம் என கூறி பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே, மதமாற்ற தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி இந்து மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் பல மாநிலங்களிலும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இதன்படி டெல்லியில் கவுடில்யா ரோட்டில் உள்ள தமிழக அரசின் வைகை இல்லம் முன் அந்த அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதி தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். இதில் மாணவிகளும் பங்கேற்று இருந்தனர்.
பின்னர் போலீசார் அமைத்திருந்த இரும்பு தடுப்பு வேலியை தாண்டி தமிழக அரசு இல்லம் நோக்கி மாணவர் கூட்டம் செல்ல முயன்றது. அவர்களை போலீசாரும், துணை ராணுவப்படையினரும் தடுத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்களில் சிலர் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது.
இதன் காரணமாக மாணவர்கள் ஆத்திரம் அடைந்தனர். கும்பலாக சேர்ந்து போலீசாருடன் மோதினார்கள். இதில் இரு தரப்பிலும் சிலர் கீழே விழுந்தனர். பின்னர் போலீசார், மாணவர்களை ஒவ்வொருவராக பிடித்து, குண்டு கட்டாக தூக்கிச் சென்று பஸ்சில் ஏற்றினர். இந்த வகையில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.