மும்பையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா; இன்று 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

மும்பையில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-30 14:40 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மும்பையில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி 11,163 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மும்பையில் நேற்று மட்டும் 1,377 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. 

இந்நிலையில் இன்று மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று புதிதாக 3,671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் இன்று மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 375 ஆக உள்ளது.

தற்போது மும்பையில் 11 ஆயிரத்து 360 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 371 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.  

மேலும் செய்திகள்