பாஜகவில் இணைந்த 2 பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
2 பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியான காங்கிரஸை வீழ்த்துவதற்கு பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய நடவடிக்கையாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தொடங்கியுள்ள பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி, அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் விதமாக 2 எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். பஞ்சாப் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான குவாடியன் தொகுதி எம்.எல்.ஏ ஃபதே ஜங் சிங் பஜ்வா பாஜகவில் இணைந்துள்ளார்.
அதேபோன்று மற்றொரு எம்.எல்.ஏவான பல்விந்தர் சிங் லட்டியும் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த வாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ரனா குர்மீத் சோதி என்பவரும் பாஜகவில் இணைந்த நிலையில், 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.