பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு நடக்க இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் கவுன்சிலிங் நடத்தப்படாமல், இடங்கள் ஒதுக்கப்படாமல் உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மருத்துவச்சேர்க்கையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் பெறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவச்சேர்க்கையில் இடம்பெறலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மருத்துவச்சேர்க்கையில் இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என எவ்வாறு நிர்ணயித்தீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மேலும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டதில் சந்தேகம் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் குழு அமைத்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு வரும் ஜனவரி 6-ம் தேதி சுப்ரீம் கோட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதனால், மருத்துவப்படிப்புக்கான அட்மிஷன் மற்றும் கவுன்சிலிங் உள்ளிட்டவை தாமதமாகியுள்ளது.
இதற்கிடையில், மருத்துவ படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் உடனடியாக கவுன்சிலிங்கை நடத்தக் கோரியும் டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள் மக்கள் நலன் கருதி தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பயிற்சி மருத்துவர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். சுப்ரீம் கோட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மருத்துவ படிப்புக்கான அட்மிஷன் மற்றும் கவுன்சிலிங்கை நடத்த முடியவில்லை. வழக்கு ஜனவரி 6-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. முதுகலை மருத்துவப்படிப்புக்கான கவுன்சிலிங் விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்’ என்றார்.