ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 450-ஐ தாண்டியது மத்தியபிரதேசம், இமாசலபிரதேசம் புதிதாக பாதிப்பு
நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 450-ஐ தாண்டியது.
சிம்லா,
இமாசலபிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆனது. இது அம்மாநிலத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாகும். 45 வயதான அந்தப் பெண்ணுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது அவர் ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்டுவிட்டார் என்று மாநில சுகாதாரத் துறை செயலாளர் அமிதாப் அவஸ்தி நேற்று தெரிவித்தார்.
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதாக அம்மாநில உள்ளாட்சித் துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நேற்று கூறினார். மத்தியபிரதேசத்தில் ஒமைக்ரான் தாக்கம் குறித்து அம்மாநில அரசு அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.
ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளான 8 பேரில் 6 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மந்திரி நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தார். மராட்டியத்தில் நேற்று புதிதாக 31 பேருக்கு ஒமைக்ரான் உறுதி ஆனது. இதனால் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 450-ஐ தாண்டியது.