எம்.இ.எஸ். அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு ஆம்புலன்சில் சென்ற கன்னட அமைப்பினர்

எம்.இ.எஸ். அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு கன்னட அமைப்பினர் ஆம்புலன்சில் சென்றனர்.

Update: 2021-12-26 18:38 GMT
முழு அடைப்பு

பெலகாவியில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் எம்.இ.எஸ். அமைப்பை, கர்நாடக அரசு தடை செய்ய வேண்டும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது. 29-ந் தேதிக்குள் அந்த அமைப்பை தடை செய்யாவிட்டால் வருகிற 31-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. ஆனால் இந்த முழு அடைப்புக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் எம்.இ.எஸ். அமைப்பை கர்நாடக அரசு தடை செய்ய வலியுறுத்தி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை முன்பு நேற்று கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பின் கஜ சேனை பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது எம்.இ.எஸ். அமைப்பு, சிவசேனா கட்சிக்கு எதிராகவும், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கன்னட அமைப்பினர் பெங்களூரு சுதந்திர பூங்காவுக்கு சென்றனர். அங்கு வைத்தும் போராட்டம் நடந்தது.

ஆம்புலன்சில் சென்றனர்

பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோக்கள், கார்கள், ஆம்புலன்சுகளில் கன்னட கொடியை கன்னட அமைப்பினர் கட்டினர். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள், கார்கள், ஆட்டோக்களில் கன்னட அமைப்பினர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு பெலகாவிக்கு சென்றனர்.

முன்னதாக கன்னட அமைப்பினர் நிருபர்களிடம் கூறும்போது, பெலகாவியில் சங்கொள்ளி ராயண்ணா சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

பெலகாவி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் மராட்டியத்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இது சரியல்ல. கர்நாடகத்தில் எம்.இ.எஸ். அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.

மேலும் செய்திகள்