இந்துத்வவாதிகள் எப்போதும் வெறுப்புணர்வையே பரப்புகின்றனர்: ராகுல் காந்தி விமர்சனம்

இந்துத்வவாதிகள் எப்போதும் வெறுப்புணர்வையும் வன்முறையையுமே பரப்புகின்றனர் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2021-12-24 11:51 GMT
புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தரம் சன்சத் என்ற மாநாடு நடைபெற்றது. ஏராளமான இந்து துறவிகள் இதில் கலந்து கொண்டனர். முக்கியமாக இந்துத்வா தலைவர் யதி நரசிங்கானந்த் கலந்து கொண்டார். 

அதில் பேசிய நரசிங்கானந்த் உள்ளிட்ட பேச்சாளர்கள், ஒரு குறிபிட்ட சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தனர். நரசிங்கனாந்த் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “ இந்துத்வவாதிகள் எப்போதும் வெறுப்புணர்வையும் வன்முறையையுமே பரப்புகின்றனர். இந்துக்கள்-முஸ்லிம்கள்-சீக்கியர்கள்-கிறிஸ்தவர்கள் அதற்கான விலையை செலுத்துகிறார்கள். ஆனால், இனிமேல் அப்படி நடக்கப்போவது  இல்லை” எனப்பதிவிட்டுள்ளார்.  

அதேபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, வன்முறை மற்றும் வெறுப்புணர்வு கருத்துக்கள் பரப்புவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேலும் செய்திகள்