கொரோனா சான்றிதழில் பிரதமரின் படம்... வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ 1 லட்சம் அபராதம்...!

கொரோனா சான்றிதழில் பிரதமரின் படம் இருப்பது அடிப்படை உரிமை மீறல் என கேரள நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Update: 2021-12-21 06:23 GMT
கேரளா ,

கொரோனா  தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள ஐகோர்ட்டு  தள்ளுபடி செய்துள்ளது.


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழில் தடுப்பூசி செலுத்தியவரின் பெயர் , வயது போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கும்.

கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.அதற்கான சான்றிதழை அவர் இணையத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுள்ளார். அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதை பார்த்த அவர் அதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கொரோனா சான்றிதழில்  பிரதமரின் படம் இருப்பது அடிப்படை உரிமை மீறல் என அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி .வி.குன்கி கிருஷ்னன் " இது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு .அதுமட்டுமின்றி மனுதாரருக்கு இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம். இதனால் அவருக்கு ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையை அவர் 6 வாரத்திற்குள்  கேரள சட்ட சேவைகள் ஆணையத்திடம் வழங்க வேண்டும் " என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் செய்திகள்