டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது...!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமைக்ரான் வைரஸ் லேசானது என்று நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-12-19 05:08 GMT
புதுடெல்லி, 

ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலகமெல்லாம் பரவி வருகிறது. டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் அதை விட பல மடங்கு வேகமாக பரவுவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், “நாம் அறிந்தவரையில், டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாக தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள தரவுகள், ஒமைக்ரானால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என காட்டுகின்றன. அதே நேரத்தில் ஒமைக்ரான் தொற்றின் மருத்துவ தீவிரத்தன்மை கட்டுக்குள்தான் இருக்கிறது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை புரிந்துகொள்ள கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன. வரும் வாரங்களில் கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கிறோம். ஒமைக்ரான் லேசானது என்று நிராகரித்து விட முடியாது. குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

நாடுகள் ஒமைக்ரான் தொற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் ஏற்கனவே கொரோனாவை தடுப்பதில் நிரூபணமாகி உள்ள ஆரோக்கிய, சுகாதார வழிமுறைகளை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். அதைக்கொண்டுதான் நாம் ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியும்.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு, போதுமான சுகாதார பணியாளர்கள் இருப்பு, பரவும் திறன் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு திறன் ஆகியவற்றை அனைத்து மட்டங்களிலும் ஆய்வு செய்து பலப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் நாம் தொடர வேண்டும். உங்களை நீங்கள் பாதுகாகத்துக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும். தடுப்பூசி போட்டு விடுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். ஜன்னல்களை திறந்து வையுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இருமலையும், தும்மலையும் பாதுகாப்பாக செய்யுங்கள்.

ஒமைக்ரானை பொறுத்தமட்டில், தடுப்பூசிகள் நோய்த்தொற்றுக்கு எதிரான செயல்திறனை குறைக்கலாம் என ஆரம்ப கட்ட தரவுகள் கூறுகின்றன. இருந்தாலும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒமைக்ரான் எந்த அளவுக்கு தடுப்பூசிக்கு தப்புகின்றன, நோய்த்தொற்றில் இருந்து பெறப்பட்ட எதிர்ப்பு சக்தியை தவிர்க்கின்றன என்பதை அதன்பின்னர் புரிந்து கொள்ள முடியும். 

தற்போதைய தடுப்பூசிகள் ஒமைக்ரானுடன் தொடர்புடைய நோய்த்தீவிரம் மற்றும் இறப்புக்கு எதிராக எந்த அளவுக்கு பாதுகாக்கின்றன என்பதெல்லாம் ஆய்வுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

பெருந்தொற்றுக்கு எதிரான முக்கிய கருவி தடுப்பூசி. ஆனால் நாங்கள் அறிந்தவரையில் தடுப்பூசி மட்டுமே பெருந்தொற்றில் இருந்து எந்த ஒரு நாட்டையும் வெளியே கொண்டு வந்து விடாது. நாம் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் பொது சுகாதார, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்