கோவா விடுதலை தினம் : பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கோவா மாநிலத்தின் விடுதலை தினத்தை முன்னிட்டு அங்கு இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவா செல்கிறார்.
கோவா,
1961 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 19) போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படைகள் விடுவித்தனர். இதற்காக ‘ஆபரேஷன் விஜய்’ என்ற திட்டத்தை இந்திய ஆயுதப்படை மேற்கொண்டது. ஒவ்வொரு வருடமும் அவர்களின் தியாகத்தை இந்த நாளில் நாம் நினைவுக்கூறும் விதமாக "கோவா விடுதலை தினம் " கொண்டப்படுகிறது.
கோவா மாநிலத்தின் விடுதலை தினத்தை முன்னிட்டு அங்கு இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவா செல்கிறார்.
அங்கு அவர் அகுவாடா சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக், நியூ சவுத் கோவா மாவட்ட மருத்துவமனை, மோபா விமான நிலையத்தில் விமானத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் டபோலிம்-நவேலிம், மார்கோவில் எரிவாயு-இன்சுலேடட் துணை நிலையம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
கோவாவில் இந்திய பார் கவுன்சில் ஆப் இந்தியா அறக்கட்டளையின் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப்படை விடுவித்ததன் நினைவாக சிறப்பு அட்டையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.