பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெலகாவியில் வன்முறை

பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெலகாவியில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சில் 26 வாகனங்கள் சேதமடைந்தனர். இதுதொடர்பாக மராட்டிய அமைப்பினர் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-18 16:29 GMT
பெலகாவியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து காலையில் போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

வடகர்நாடகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. கர்நாடகம்-மராட்டியம் மாநில எல்லைகளில் இந்த பெலகாவி மாவட்டம் அமைந்து உள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு

இந்த மாவட்டத்தில் மராத்தியர்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெலகாவி, மராட்டியத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று மராட்டியம் அடிக்கடி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் ‘‘பெலகாவி எங்களது சொத்து. எக்காரணம் கொண்டும் பெலகாவியை விட்டு கொடுக்க மாட்டோம்’’ என்று கர்நாடகம் கூறி வருகிறது.

இதனால் பல ஆண்டுகளாக பெலகாவி விஷயத்தில் கர்நாடகம்-மராட்டியம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. சில நேரங்களில் மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பெலகாவியில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடவும், ஆண்டுதோறும் சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தவும் மராட்டியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் பெலகாவியில் கன்னட ராஜ்யோத்சவா விழாவும், சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடரும் நடந்து வருகின்றன.

கன்னட கொடி எரிப்பு

இந்த நிலையில் பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தை சேர்ந்த எம்.இ.எஸ்.(மராட்டிய ஏகிகிரண் சமிதி) அமைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது எம்.இ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மீது கன்னட அமைப்பினர் கருப்பு மையை பூசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே பெலகாவியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் எம்.இ.எஸ். தொண்டர்கள், கன்னட கொடியை எரித்தனர். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. எம்.இ.எஸ். அமைப்பை கண்டித்து கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

வாகனங்கள் மீது கல்வீச்சு

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சிவாஜி சிலை மீது கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசி அவமதித்தனர். இதை கண்டித்து முன்தினம் பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு சென்ற உயர் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் எம்.இ.எஸ். அமைப்பினர் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் முயன்றனர்.

இதனால் போலீசார், எம்.இ.எஸ். அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதையடுத்து எம்.இ.எஸ். அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இந்த நிலையில் பெலகாவி டவுன் ராமலிங்க கிண்டஹள்ளி, குல்கர்னிஹள்ளி, பட்டீல் ஹள்ளி ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த கர்நாடக அரசுக்கு சொந்தமான 6 கார்கள், 6 போலீஸ் ஜீப்புகள் உள்பட 26 வாகனங்கள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 26 வாகனங்களின் கண்ணாடிகளும் சுக்குநூறாக நொறுங்கியது.

போலீஸ் ஜீப்புக்கு தீ

பின்னர் மாதவ ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள், அந்த விடுதியின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்கள் தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி காவலாளியும், ஊழியர்களும் ஜீப்பில் பிடித்த தீயை அணைத்தனர்.

இருப்பினும் அந்த போலீஸ் ஜீப் சேதம் அடைந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் தியாகராஜன், துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சங்கொள்ளி ராயண்ணா சிலை உடைப்பு

இதற்கிடையே பெலகாவி டவுன் கனகதாசா காலனியில் உள்ள சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையின் கையில் வைக்கப்பட்டு இருந்த வாள், கேடயத்தை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் அங்கு கன்னட அமைப்பினர், சங்கொள்ளி ராயண்ணாவின் ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். பின்னர் சங்கொள்ளி ராயண்ணாவின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திலக்கவாடி போலீஸ் நிலையம் முன்பு கன்னட அமைப்பினர், சங்கொள்ளி ராயண்ணா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு சென்ற உயர் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதன்பின்னர் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட பகுதிகள், ஜீப்புக்கு தீ வைக்கப்பட்ட விடுதி, சங்கொள்ளி ராயண்ணா சிலை அமைந்திருந்த பகுதி ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கும்பல் கார்களின் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள், போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தது, சங்கொள்ளி ராயண்ணா சிலையை சேதப்படுத்தியது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த கும்பல் எம்.இ.எஸ்., இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

27 பேர் கைது

இதையடுத்து அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீராம சேனை இந்துஸ்தான் அமைப்பின் தலைவர் ராமகந்தா, மற்றும் மராட்டிய அமைப்பினர் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் முன்தினம் நள்ளிரவே நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் 27 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கல்வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெலகாவி கேம்ப், மார்க்கெட், காடே பஜார் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகினற்னர்.

இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறுகையில், ‘‘இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காத வண்ணம் கண்காணித்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெலகாவியில் மராத்தி மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில சமூக விரோதிகள் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க நினைக்கிறார்கள்’’ என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் சில்லரை அரசியலுக்காக சங்கொள்ளி ராயண்ணா, சிவாஜி ஆகியோரின் பெயர்களை எந்தவொரு சமுதாயத்தினரும் பயன்படுத்தக்கூடாது. மொழிக்காகவும் அவர்களின் பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்றார்.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மந்திரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மக்கள் அமைதி காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்