ஒமைக்ரான் தொற்று நிலைமையைப் பொறுத்து சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் - மத்திய மந்திரி தகவல்

ஒமைக்ரான் தொற்று நிலைமையைப் பொறுத்துதான், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும் என மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-14 22:21 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் சர்வதேச விமான சேவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் சரக்கு விமான சேவையும், சிறப்பு விமான சேவையும் இயங்கி வந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் சர்வதேச விமான சேவைகள் டிசம்பர் 15-ந் தேதி (இன்று) மீண்டும் தொடங்கி விடும் என கடந்த மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவத்தொடங்கியதால் சர்வதேச விமான சேவை திட்டமிட்டபடி தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் டெல்லியில் நேற்று இந்திய தொழிற்சபை நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாங்கள் சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிப் பணியாற்றி வருகிறோம். ஒமைக்ரான் வைரஸ் தொற்று நிலைமையைப் பொறுத்துதான், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும். ஆனால் எப்போது இது தொடங்கும் என்று உங்களுக்கு ஒரு தேதியை குறிப்பிட முடியாது” என கூறினார்.

மேலும், “இதில் நிறைய காரணிகள் உள்ளன. பிற அமைச்சகங்களுடன் நான் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அடுத்த 2 வாரங்களில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்