ஆந்திராவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்....!
டெல்லி,மராட்டியம், கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவில் நுழைந்தது ஒமைக்ரான்.
அமராவதி,
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. கவலைக்குரிய வகையாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் தற்போது கிட்டத்தட்ட 60 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்தது. நாடு முழுவதும் மொத்தம் 33 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில், ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர் அயர்லாந்தில் இருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு வந்த பதினைந்து பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளின் மாதிரிகளும் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.