ஓமைக்கரான்: மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-11 03:03 GMT
மும்பை,

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் இந்தியாவுக்குள்ளும் நுழைந்ததோடு, கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்திலும் தடம் பதித்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக மும்பையை அடுத்த கல்யாண் டோம்பிவிலிக்கு வந்த 33 வயது என்ஜினீயர் அந்த தொற்றால் கடந்த 4-ந் தேதி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும் நைஜீரியாவில் இருந்து புனேயை அடுத்த பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்த 44 வயது பெண், அவரது 2 மகள்களுக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் மூலம் பெண்ணின் சகோதரர், அவரது 2 மகள்களுக்கும் தொற்று பரவியது. இதனால் ஒரே குடும்பத்தில் 6 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் புனே நகரில் ஒருவரும், மும்பையை சேர்ந்த 2 பேரும் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா பிடியில் சிக்கியதால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து இருந்தது.

இந்தநிலையில் நேற்று பச்சிளம் குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். 4 பேர் புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்வாட் பகுதியை சேர்ந்தவர்கள். மும்பையை சேர்ந்த 3 பேரும் முறையே 49, 25, 37 வயதுடைய ஆண்கள். இவர்கள் தான்சானியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள்.

இதேபோல புனே பிம்பிரி சிஞ்வாட்டில் பாதிக்கப்பட்ட 4 பேரும், ஏற்கனவே பாதிப்பு கண்டறியப்பட்ட நைஜீரியாவில் இருந்து வந்த 44 வயது பெண்ணின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில் 3¾ மாத பச்சிளம் குழந்தையும் அடங்கும்.

தொற்று பாதித்த 4 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. 3 பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. புதிய பாதிப்புடன் சேர்த்து மராட்டியத்தில் இதுவரை ஒமைக்ரானுக்கு ஆளானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தநிலையில் மும்பையில் 11-ம் தேதி, 12-ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  144 உத்தரவு தடை அமலுக்கு வந்ததால் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தவும்,  4 நபர்களுக்கு மேல் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது. 

மராட்டிய மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடக மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்