கேப்டன் வருண் சிங்குக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு 80% தீக்காயத்துடன் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் இறந்தனர். இதில் உயிர் தப்பியவர் விங் கமாண்டர் (விமானி) வருண்சிங் ஆவார். இவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வெலிங்டனில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று மதியம் வருண்சிங் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவுக்கு நேற்று மாலை 5 மணியளவில் வருண்சிங் கொண்டு செல்லப்பட்டு ராணுவ கமாண்டோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு 80% தீக்காயத்துடன் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலை மறு சீரமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற 7 மருத்துவர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை காப்பாற்றும் நோக்கிலே டாக்டர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.