புதுச்சேரி காந்தி சிலை பகுதியில் படகுகளில் கருப்புக்கொடியேற்றி கடலில் மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரி காந்தி சிலை பகுதியில் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி கடலில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-23 22:51 GMT
கருத்து வேறுபாடு
இந்தியாவில் பல மாநிலங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக மீனவர்களின் ஒருதரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இருந்தபோதிலும் புதுவையில் மீனவர்கள் சிலர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். மீன் பிடிப்பதில் இப்படி மீனவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி மீனவர்கள் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள். அப்போது மீனவர்கள் தங்களுக்குள் பேசி முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

வேலைநிறுத்தம்
இதற்கிடையே சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.தொடர்ந்து அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்திரப் படகு, எப்.ஆர்.பி. படகு மீனவர்கள் கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்தனர். அப்போது கடலில் படகுகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கருப்புக்கொடி
இதன்படி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் புதுவையின் பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் தங்களது படகுகளில் அலை அலையாக திரண்டு வந்தனர்.காந்தி சிலை முதல் தலைமை செயலகம் வரையிலான கடல் பகுதியில் தங்கள் எந்திர படகுகள் மற்றும் எப்.ஆர்.பி. படகுகளை நிறுத்தி இருந்தனர். அந்த படகுகளில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியும் ஏற்றி இருந்தனர்.200-க்கும் மேற்பட்ட படகுகளில் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிராக 
நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தி கோஷமிட்டு விட்டு கடல் வழியாகவே கலைந்து சென்றனர்.

இதையொட்டி புதுவை கடற்கரையில் நேற்று காலையில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்