என்னை வேண்டுமானால் தண்டியுங்கள், தேர்தல் கமிஷனுக்கு எதிரான கருத்துகளை வாபஸ் பெறுங்கள்; தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாரின் மனுவில் கோரிக்கை

என்னை வேண்டுமானால் தண்டியுங்கள், தேர்தல் கமிஷனுக்கு எதிரான கருத்துகளை வாபஸ் பெறுங்கள் என்று தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தயாரித்த வரைவு பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 22:44 GMT

கொலை குற்றச்சாட்டு

கொரோனா பரவல் அதிகரித்ததற்கு தேர்தல் கமிஷனே பொறுப்பு என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது. தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்த வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தது.இந்த கருத்துகளை வாபஸ் பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்தது. ஆனால், சென்னை ஐகோர்ட்டு வாய்மொழியாக தெரிவித்த கருத்துகள் என்பதால், அதை நீக்கும் கேள்வியே எழவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து விட்டது.

இதற்கிடையே, தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்வதற்காக ஒரு வரைவு பிரமாண பத்திர மனுவை தயாரித்து இருந்தார். ஆனால், வக்கீலின் அறிவுரையை ஏற்று, அவர் அதை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.

தள்ளி வைக்காதது ஏன்?

அந்த மனுவின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் ராஜீவ் குமார் கூறியிருப்பதாவது:-

5 மாநில சட்டசபை தேர்தலின்போது, கொரோனா பரவல் காரணமாக, சில கட்ட தேர்தல்களை தள்ளி வைத்திருக்கலாம் என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால், அப்படி செய்வது சாத்தியமற்றதாக இருந்தது. அப்படி தள்ளி வைத்திருந்தால், தற்போதைய ஆட்சியின் பதவிக்காலத்தை நீ்ட்டித்தோ அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியோ தான் தேர்தலை நடத்த வேண்டி இருந்திருக்கும். அது, ஒரு கட்சிக்கு சார்பாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழ வழிவகுத்திருக்கும்.ேமலும், மேற்கு வங்காளத்தில் சில கட்ட தேர்தல்களை ஒன்றாக இணைத்து நடத்துவதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சாத்தியமற்றதாக இருந்தது.

விலக தயார்

தேர்தல் நடத்துவதில் 11 லட்சம் பேர் பணியாற்றினர். சென்னை ஐகோர்ட்டின் ‘கொலை குற்றச்சாட்டு’ கருத்து அவர்களது மனஉறுதியை சீர்குைலத்து விடும். கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றியே தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்தியது.எனவே, தேர்தல் கமிஷன் மீதான கடுமையான கருத்துகளை வாபஸ் பெற வேண்டும். அனைத்து சந்தேகங்களில் இருந்தும் விடுவிக்க வேண்டும். வேண்டுமானால், என்னை தண்டியுங்கள். தேர்தல் கமிஷனர் பொறுப்பில் இருந்து நான் விலகவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்